Sunday, January 16, 2011

இணையதள‌ ஜோசியம் சொல்லும் இணையதளம்


இணையதளங்களை மதிப்பிடுவதற்கு என்று  இது வரை அலெக்ஸா மட்டுமே இருக்கிறது.ஆனால் அலெக்ஸா கூட இணையதளங்களின் மதிப்பீடினை வழங்குவதாக சொல்ல முடியாது. இணையதளங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரபலமாக உள்ள தளங்களின் தரவரிசையை மட்டுமே அலெக்ஸா வழங்குகிறது.
ஆனால் இணையதளத்தின் வடிவமைப்பு,உள்ளடக்கம் போன்றவற்றை சீர் தூக்கி பார்த்து தர‌ம் பிரித்து சொல்லும் சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.அதிலும் பயன்பாடு நோக்கில் தளங்களை அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கள் இல்லை என்றே தோன்றுகிற‌து.
ஹவ் நைன்டீஸ் டாட் காம் இந்த குறையை போக்குமா என்று தெரியவில்லை,ஆனால் இணையதளங்களை மதிப்பீட்டு செய்து அதற்கான அறிக்கையை அளிக்கிற‌து.ஒரு இணையதளம் காலத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்னும் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.
கொஞ்சம் புதுமையான வழியில் இந்த கேள்விக்கு விடை அளிக்க முயல்கிறது இந்த தளம்.
அதாவது குறிப்பிட்ட இணையதளம் 90 களில் சிக்கித்தவிக்கிறதா என்பதை இந்த தள‌த்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
90 கள் என்பது இணைய உலகை பொருத்தவரை கற்காலம் என்று பொருள் கொள்ளலாம்.காரணம் 90 களில் இருந்து எல்லா வகைகளிலும் இணையம் எங்கே முன்னேறி வந்துவிட்டது.வடிவமைப்பு நோக்கிலும் சரி,தொழிநுட்ப நோக்கிலும் சரி இணையதளங்களில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.தொழிநுட்ப அம்சங்களில் மட்டும் அல்ல பார்வையாளர்கள் பன்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தி த‌ருவதிலும் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளன.
உதாரணத்திற்கு முன்பெல்லாம் நேயர்களின் கருத்தை அறிவதற்கான பகுதி இணையதளத்தின் கீழே சின்னதாக இடம்பெற்றிருக்கும்.தவிர அதனை ஒரு சம்பிரதாயமாக மட்டுமே நிறுவங்கள் கருதியுள்ளன.ஆனால் இப்போது தளங்களின் உள்ளடக்கத்திலேயே இணையவாசிகள் பங்கேற்க வாய்ப்பு தரும் போக்கு வலுப்பெற்றுள்ளது.
அதே போல பேஸ்புக்,டிவிட்டர் மற்றும் இதர சமூக வலைபின்னல் சேவைகளின் பகிர்வு வசதியையும் உள்ளடக்கி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனவே ஒரு இணையதள‌த்தின் தோற்றமோ வடிவமைப்போ நேர்த்தியாக இருந்தால் போதாது.மேலும்  அதன் உள்ளடக்கம் சிற‌ப்பாக இருந்தாலும் போதாது.எல்லா வகையிலும் தளம் நவீன தன்மையோடு இருக்க வேண்டும்.குறிப்பாக பயன்பாடு நோக்கில் எளிதானதாகவும் ,குழப்பம் இல்லாததாகவும் இருந்தாக வேண்டும்.
இதற்கு மாறாக உள்ள தளங்களை பழமை மாறா தளங்கள் என்றே சொல்ல வேண்டும்.அதாவது இணைய உலகின் ஆரம்ப காலமான 90 களின் வாடை அடிக்கும் தளங்கள்.
இப்படி எந்த தளங்கள் எல்லாம் 90 களின் தனமையுடனேயே இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஹவ் நைன்டீஸ் சேவை அமைந்துள்ளது.இந்த தளத்தில் ஒரு இணையதளத்தை சம்ர்பித்தால் அது எந்த அளவுக்கு 90 களின் தனமையை பெற்றுள்ளது என்பதை கணக்கிட்டு சொல்லி விடுகிறது.
ஒளிரும் டெக்ஸ்ட் உள்ளதா,பிரேம்கள் பயன்படுத்தப்ப‌ட்டுள்ளனவா,போன்ற மசங்களை எல்லாம் பரிசீலித்து எத்தனை சதவீதம் 90 களின் தன்மையோடு தளம் இருக்கிறது என்னும் அறிக்கையையும் வழங்குகிறது.
இது வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்கள் சமர்பிக்கப்பட்டு பரீசிலிக்கப்பட்டுள்ளன.அதோடு பழமை மாறாத தளங்களுக்கு என்று தனி பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் கற்கால தளங்களை பார்வையிடலாம்.
நம‌க்கு அறிமுகமான தளங்களை இங்கு சம‌ர்பித்து பார்க்கலாம்.தளங்களுக்கான முடிவுகள் எதிர்பாராததாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைந்துள்ளன.
உதாரனத்திறகு கூகுல் அல்லது பேஸ்புக் தளங்கள் 20 சதவீதம் பழங்கால தன்மை கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கபடுகிறது.பிரபல செய்தி தளங்களான பிபிசி மற்றும் சிஎன் என் ஆகியவையும் கொஞ்சம் பழங்காலததனமை கொண்டதாகவே அறிய முடிகிற‌து.
ஆச்சர்யப்படும் வகையில் டிவிட்டர் 100 சதவீதம் புதுயுகத்தின் தன்மை கொண்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்படுகிற‌து.
தளங்களின் தன்மை பற்றிய விளக்கத்தோடு அதனை மேம்படுத்துவதற்கான குறிப்புகளும் தரப்படுகின்றன.ஆனால் இந்த குறிப்புகள் தனிப்பட்ட தளங்களின் ஆய்வாக இல்லாமல் பொதுவான குறிப்பாகவே அமைந்துள்ளது.இதனால் தளங்களுக்கான ஜோஸ்ய குறிப்புகள் போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
தனிப்பட்ட தளங்களின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் குறிப்புகள் வழங்கப்படுமானால் பயனுள்ளதாக இருக்கும்.இருப்பினும் இந்த தளம் சுவாரஸ்யமானது என்பதை மறுப்பதற்கில்லை.
இனையவாசிகள் தங்கள் அபிமான தளங்களின் பட்டியலோடு இந்த‌ தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
இணையதள முகவரி;http://how90s.com/

படித்தது : cybersimman

No comments:

Post a Comment